சம்மாந்துறை அபிவிருத்தி விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் கெளரவ தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு, நகர அபிவிருத்தி, உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு அல் ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்களோடு 2019/03/27 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு சம்மாந்துறை மண்ணின் மைந்தன் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் M.I.M.Mansoor அவர்களின் ஏற்பாட்டிலும் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்றது.
சம்மாந்துறை மக்கள் சார்பாக, சம்மாந்துறை முப்பெரும் சபைகளான
சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷரா, நம்பிக்கையாளர் சபை, ஜமியதுல் உலமா, மற்றும் சம்மாந்துறை நலனுக்கும் அபிவிருத்திக்குமான பேரவை (SWDC), SWDC Colombo Branch, வேர்களும் விழுதுகளும் ஆகிய அமைப்புக்களின் சார்பாக சம்மாந்துறை பொது மக்களின் கருத்தினை பிரதிபலிக்கும் பின்வரும் விடயங்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டது.

01. முதலில் புதிய அமைச்சரவையில் தாங்கள் உயர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இவ்வமைச்சு சார்ந்த SLIATE என்ற நிறுவனம் சுமார் 25 வருட காலமாக பல்வேறு தடைகளையும் தாண்டி தற்போது மிக வெற்றிகரமாக சம்மாந்துறையில் இயங்கி வருகிறது. தாங்கள் உயர் கல்வி அமைச்சராக இருக்கும் காலத்தில் முஸ்லிம் பிரதேசத்தில் இருக்கின்ற இவ்நிறுவனத்தினை தரம் உயர்த்தி தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அதே நேரம் இந்நிறுவனத்தினை வேறு பிரதேசங்களுக்கு கூறு போட்டு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக நம்பகமாக அறிகிறோம். ஒரு உயர் கல்வி நிறுவனத்தை இவ்வாறு கூறுபோட்டு ஒரே பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் இயங்க செய்வது ஒரு உயர் கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல என்பதனை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றோம். (இதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.)

02. சம்மாந்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தினை நகர சபையாக்குவதும் புதிய பிரதேச சபை ஒன்றினை உருவாக்குவதும் தொடர்பான நீண்ட கால கோரிக்கையை அவசரமாக சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோருகிறோம். (இதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.)

03. வருடாந்தம் வரவு செலவு திட்டத்தில் பிரேரிக்கப்படும் சம்மாந்துறை நகர அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்ளுமாறு கோருகிறோம். இதற்காக எங்களது அமைப்புக்கள் உடனடியாக ஒத்துழைப்புக்களை வழங்க தயாரகவுள்ளது.

04. சிரேஸ்டத்துவத்தில் பாதிக்கப்பட்ட நிருவாக உத்தியோகத்தர்களுக்கான
பொருத்தமான பதவிகளை அல்லது இடங்களை இனங்காண கோருகின்றோம்.
மேற்காணும் விடயங்களை பொறுப்புள்ள அமைச்சராக தாங்கள் பதவி வகிக்கும் இக்காலத்தில் – தேர்தல்களை எதிர்நோக்குகிற இச்சந்தர்பத்தில் துரிதமாக நிறைவேற்றி தருமாறு சம்மாந்துறை பொது மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது.

சம்மாந்துறை சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகளை கீழே காணலாம்.